Wednesday, November 27, 2013

EXPO 2020

இது தோனியோட 20:20 இல்ல துபாயோட 2020.UAE ல் உள்ள அனைவரும் சமீப காலமாக அடிக்கடி சொல்லும் வார்த்தை இந்த 2020 எக்ஸ்போ தான்.

என்ன இந்த எக்ஸ்போ 2020?

ஏழு வருடத்திற்கு அப்புறம் 2020ல் நடக்கவிருக்கும் ஒரு எக்ஸ்சிபிஷன் ட்ரேட்பேரை  குறிப்பதுதான் இந்த எக்ஸ்போ 2020.

ஆறுமாத காலத்திற்கு நடக்கும் இந்த எக்ஸ்போவிற்கு 2.5 கோடி நபர்கள் வருவார்கள் எனவும், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரி 2020 ல் நடக்கும் விஷயத்திற்கு இப்போ என்ன என்றால், அந்த எக்ஸ்சிபிஷன் நடத்துவதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதுதான்   பாரீஸில்  இன்று நடந்து கொண்டிருக்கிறது.பீரோ ஆப்  இன்டர்நேஷனல் எக்ஸ்போசிஷன் (BIE )என்னும் அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகள் சேர்ந்துதான்  இதனை  நடத்தும் இடத்தினை தீர்மானிப்பது மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதும்.

சிம்பிளாக சொல்வதென்றால் எக்ஸ்போ நடத்த விருப்பமுள்ள நாடுகள், தங்களிடமுள்ள சிறப்பம்சங்களை குறிப்பிட்டு  இதில் கலந்து கொள்ளும். BIE  அமைப்பால்  அவர்களுடைய பொருளாதார தகுதி,தரை மற்றும்  வான்வழி போக்குவரத்து வசதிகள், இதனை நடத்துவற்கான உள்கட்டமைப்பு வசதிகள்  பரிசீலனை செய்யப்படும்.போட்டியில் பங்கு பெரும்  நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்வது உண்டு.

கடைசி நாளான இன்று   இது குறித்த 20 நிமிட வீடியோ இன்று ஓட்டெடுப்பிற்கு முன்னர் BIE  மெம்பர்களுக்கு திரையிடப்படும் பின்னர்   BIE -ல் உள்ள 163 நாட்டு  மெம்பர்கள் ஓட்டெடுப்பின் மூலம் அந்த நாடு தேர்ந்தெடுக்கப்படும்.

இதனால் என்ன உபயோகம்?

சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரம் தான். இதனை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதன் மூலம் அடுத்த 5 வருடங்களுக்கு,
  • அந்நிய முதலீடு பெருமளவில் ஈர்க்கப்படும்.
  • நேரடியாக கட்டுமானம், மற்றும் அதனை சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் .
  •  வங்கிகள் மற்றும் பொதுத்துறைகளில்  தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு பெரும்.
  • ஹோட்டல், டூரிசம் கணிசமாக வளர்ச்சியடையும்.
  • பொருளாதாரம்,தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
(இவை எல்லாவற்றையும் விட கேரளாவுல மிச்சமீதி இருக்கும் நம்ம சேட்டன்கள்  வரவு ரொம்ப ரொம்ப அதிகரிக்கும் )

இந்த ரேசில் ஜெயிக்கத்தான் துபாய் படு மும்முரமாக செயல் படுகிறது. இதனை நடத்துவதன் மூலம் 2009-11 களில் இருந்த பொருளாதார மந்த நிலையில் இருந்து முற்றிலுமாக வெளிவர இதனை ஒரு அறிய வாய்ப்பாக துபாய் கருதுகிறது.
இதற்கான போட்டியும் கணிசமாக இருக்கிறது.

ரேசில் இருக்கும் நாடுகள் 
1.துபாய் 
2.துருக்கி 
3.பிரேசில் 
4.ரஷ்யா .

 மொத்தமாக போட்டியிடும் நான்கு நாடுகளில் கடும் சவாலாக இருப்பது துருக்கி என்கிறார்கள். பழைய பாரம்பரியத்தை பின் பற்றி வரும் நாடுகளில் இதுவும் ஒன்று என்பதால் முன்னுரிமை சற்று கூடுதலாக உள்ளது.ஆனால் இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகளும் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களும் இதற்கு பெரிய பின்னடைவை கொடுத்திருக்கின்றன.

எல்லா காரணிகளிலும்  அதிக முன்னிலையோடு துபாய் இருப்பது இதற்கான வாய்ப்பை சற்று பிரகாசமாக வைத்துள்ளன. இது நடைபெறும் இடம் குறித்த சில புகைப்படங்கள் ,








இது குறித்த இறுதி முடிவு இன்று இரவு துபாய் நேரப்படி 8.30மணிக்கு பாரீஸில் இருந்து   அறிவிக்கப்படும்.

பார்க்கலாம் பூங்கொத்தா அல்லது  புஸ்வாணமா என்று !!!!

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!



Tuesday, November 5, 2013

பொய்யாய்க் கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா.

அன்பாயிருந்த மகனுக்கு,

ஒரு மழைக்கால ராத்திரியில்தான் நீ பிறந்து என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினாய்.என் கைச்சூடு கண்டுகொண்டதால்   என்னவோ பிறந்த சில மாதங்களுக்கு  என்னைத்தவிர யாரிடமும் சென்றதில்லை நீ. ஒருநாளில்  எனக்காக நான் ஒதுக்கிய நேரம் சில  நிமிடங்கள்  மட்டுமே.

மழைக்  காலமாகையால் நீ ஈரமாக்கிய துணிகளை துவைத்து   வெளியில் காய வைக்க இயலாமல் விறகு அடுப்பின் வெம்மையில் உலர்த்தி  தருவார்  உனது அம்மாச்சி.  

"முந்தித்  தவமிருந்து
முன்னூறு நாட்  சுமந்து
அந்திப் பகலாய் இறைவனை வந்தித்து" 

பெற்றெடுத்த உன்னை, உடலால் தோளிலும், மனதால் நெஞ்சிலும் சுமந்து திரிந்தார் உனது தந்தை.உனது மழலைச்  சொல் தான்  எங்கள் வேதமாகியது.நீ இருக்கும் இடம்தான் எங்களுக்கு விருப்பிடமானது.   உலகினை பொறுத்தமட்டிலும் நீ வளர்ந்து கொண்டே இருந்தாய் நானோ சிறுபிள்ளையாகிக் கொண்டிருந்தேன்.

நடைவண்டியோட்டி நீ  நடை பழகிய காலத்தில் கொல்லைப்புற வாசல்  ஓரமாய் இருந்த கல் தடுக்கி  நீ விழுந்து விட்டாய். உனக்கு அடிபட்டு விட்ட ஆதங்கத்தில் உன் தந்தை பெயர்த்து எறிந்த அந்தக் கல்,எல்லைக் கல் ஆனதால்  பங்காளி வீட்டு  பகையாகி காவல் நிலையம் வரை சென்றது தனிக்கதை.

நீ பள்ளி சென்ற முதல் நாளின் வெறுமையை  தாங்க இயலாமல், நாள் முழுவதும் பித்து பிடித்தாற்  போல இருந்தது உனக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

எனக்கும் உன் தந்தைக்குமான கருத்து வேறுபாடுகள் மிக சொற்பமே. உன்னால்,  உன் பருவ வயதில் நீ செய்த தவறுகளால்  எனக்கும் உன் தந்தைக்குமான மனஸ்தாபங்கள் ஏராளம்.

நீ உடுத்திய  உடை முதல்  படித்த  கல்லூரி மற்றும் கட்டிய மனைவி  வரை உனது விருப்பமே பிரதானமாக இருந்தது. நீயும் நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வந்து விட்டாய். மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் உனக்குத்தான் நான் மிகவும் வேண்டாதவளாகிப் போய்விட்டேன். தளர்ந்த உடலும்,  சுருக்கம் விழுந்த முகமுமாக நான்தான்  அந்நியப்பட்டுப் போய்விட்டேன்.

முன்பொரு காலத்தில் முழு வீட்டையுமே ஆக்கிரமித்து இருந்தாய் நீ.  அதில்  எனக்கொரு ஒட்டுத்திண்ணை கூட கிடைக்காதது எனது துரதிர்ஷ்டமே. எனக்கு வசதியாய் இருக்கட்டும் என்று,  என்னைப்போல அனாதைகள் நிரம்ப உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளாய்.

 நன்றாகத்தான் இருக்கிறது மகனே நீ சேர்த்து விட்டிருக்கும் முதியோர் இல்லம்,  என் போன்ற அனாதைகளின் ஏக்கப் பெருமூச்சோடு. எதற்கும் இருக்கட்டும் இந்த அறையையும் முன்பதிவு செய்து கொள். உன் காலத்தில் இதற்கும் வரலாம் இடப்பற்றாக்குறை!!!.  

இப்படிக்கு 
பொய்யாய்க்   கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா .


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!