Wednesday, March 5, 2014

வெட்கங்களின் தேவதை!!!

உன்னை முதலில் பார்த்தது கிராமத்து   நண்பனின் வீட்டு விஷேசத்தின் போதுதான். நட்சத்திர பரிவாரங்களுடன் வெளிவரும் வெண்மதியாய்,இளஞ்சிவப்பு நிற தாவணியில்  தேவதையாய்  உன் தோழிகளுடன்   தரிசனம் தந்தாய்  அன்று.

தேவதை சிரிப்பதையும்,பேசுவதையும்,  தரையில் கால் பாவாமல் நடப்பதையும் அன்றுதான் நேரில் கண்டேன். கண்டவுடன் காதல் என்பதில் எல்லாம் நம்பிக்கையற்று இருந்த எனது உறுதியை அசைத்து போட்டு விட்டது நீ தவற விட்ட கைக்குட்டை .

காதல்,  பெண்கள் என எதிலும் சுவாரஸ்யமற்று இருந்த எனக்கு நீயே மிகுந்த சுவாரஸ்யமானாய்.சற்றே அலுப்பு தட்டின எனது வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாக்கியது  உனது வருகை.

நண்பனின் தங்கையும்,அவளது தோழிகளும் அண்ணா என்றே என்னை அழைக்க, வெறும் வாங்க போங்கவுடன் நிறுத்திக் கொண்ட உனது செம்மொழியும், உன் பார்வை என்மேல்  பட்டபோது தெரிவித்த விழிமொழியும்,  எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த ரசவாதம் உன்னிலும் நிகழ்வதை எனக்கு உணர்த்தியது.

யாருடா அந்தப் பொண்ணு? என்று கேட்ட என்னை அதிசயமாய் பார்த்தவாறே   உன்னைப் பற்றி ஒப்பித்தான் என் நண்பன் . அவ்வப்போது உன்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் சொல்வதும் அவன்தான்.

நான் விசாரித்ததைப்  போலவே நீயும் என்னைக்குறித்து விசாரித்ததை பின்னாளில் அறிந்தவுடன் கண்டவுடன் காதல் என்பதில் எனக்கு அதீத  நம்பிக்கை பிறந்தது.காதல் தேவதையின் ஆசிர்வாதமோ என்னவோ, உனக்கான வேலையும் எனது ஊரிலேயே கிடைத்து விட எனக்கோ கொண்டாட்டமாகிப் போனது.

அவ்வப்போது கிடைக்கும் தேவதையின் தரிசனமே மீண்டும் மீண்டும் என்னை காதலோகத்தில் சஞ்சரிக்க வைத்தது. எதிர்ப்படுகையில் வழக்கமான நல விசாரிப்புகளுடன் என்னைக் கடந்து போய்விடுவாய்.  தயக்கம் கலைத்த ஒரு மாலையொன்றில் அலைபேசினாய், எனக்கோஅது குயிலின் கீதம்.

ஏதோ கனவில் பேசுவது  போல இருந்தது. அதன் பின்னர்  தினமும் என்னை எழுப்புவதே உனது குட்மார்னிங்  குறுந்தகவல்கள்தான்.

உடன் வேலை செய்யும் பெண்களுடன் எத்தனையோ பேசினாலும், உன்னுடனான வார்த்தைகள் சொற்பமே.   எனக்கும் சேர்த்து  நீதான் எல்லாம் பேசுவாய்.
ஏன் ஒன்னும் பேச மாட்டேங்கிறீங்க ? என்ற உன் கேள்விக்கும்  வழக்கம் போல் என் புன்னகையே  மௌனமாய் பதில் சொல்லும்.

காதலை சொல்லிக் கொள்ளவில்லை நாமிருவரும் அவ்வளவுதான்.இருவருக்குமான மனவோட்டங்களை குறித்து  மனதளவில்  புரிந்துணர்வு இருந்தாலும் கூடவே ஒரு தயக்கமும் இருந்தது.  திருமணம் செய்து வைக்க எனது  வீட்டில் காட்டிய தீவிரம் எனது தயக்கத்தை தூரப்போட வைத்தது.

உனக்கு மிகவும் பிடித்த தினமான   கார்த்திகை தீபத்தன்று  உன்னை என்  வீட்டிற்கு அழைத்தேன். நிறைய பரவசமும் கொஞ்சம் தயக்கமுமாய் என் வீட்டில் அடியெடுத்து வைத்தாய். அமர்க்களப்பட்டது வீடு.

சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்து விட்டு, நமக்கென வாய்த்த ஒரு தருணத்தில் தீபங்களுக்கிடையில்  ஒரு மகா  தீபமாய், படர்த்திய பெரிய விழிகளுடன் என்னை பார்த்து, உன் அம்மாவிடம்  என்னை யாரென்று  கூறினாய்? எனக் கேட்டாய் .

வழக்கம் போல மொழியறியா  என்  புன்னகையை கண்வழியே கடத்தி   உன் விழியுடன் நன்றாக உறவாட விட்டு    "இன்று உன் மருமகளை கூட்டி வருவதாகச் சொன்னேன் " என்றவுடன், குறுகுறுத்த பார்வையும் , லேசாகத்  தெரியும் அந்த தெத்துப்பல்லுமாய் மெல்லிய  அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் வெட்கப்பட்டாய் நீ.

அதுவரை  தேவதையாய் இருந்த  நீ,  அன்றுதான் "வெட்கங்களின் தேவதை" ஆனாய். நானோ கொண்ட  காதல் கைகூடிய மகிழ்ச்சியில்  தீபங்களின் ஒளியில் கரையலானேன்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!